Thursday, April 5, 2012

I...P...L...1


”போகிற போக்கில் ஐ...பி...எல்...1”

விளம்பரங்கள் என்ன... வினோதங்கள் என்ன... கொண்டாட்டங்கள் என்ன.... கோலாகலங்கள் என்ன...
திரு விழாக் கோலம் பூண்டது ஐ...பி...எல்... கிரிக்கட் போட்டிகள்..!

இரண்டு முறை அடுத்தடுத்து ‘சேம்பியன்கள்’ என்ற இறுமாப்பு..ஏகப்பட்ட மக்களின் ஆதரவு பின்பலம்
ரத - கஜ - துரக - பதாதிகளோடு களமிறங்கினார்கள் சென்னை சூப்பர் கிங்க(ர)ர் கள்...! எட்டு முறை மோதி
நான்கு முறை வென்று நான்கு முறை சென்னையிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் எதிரணி.!

நல்ல துவக்கம் ஓர் அணிக்கான இலட்சணம். முரளி விஜய் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர்தான் -
இந்திய அணிக்குக் கூட ஆடி இருக்கிறார். ஐ.பி.எல்.போட்டியில் சேப்பாக்கில் சதமடித்த ஒரே ஒரு வீரர்.
அந்த சதத்தில் பதினோரு சிக்சர்கள். இப்போது எழுந்த சிக்கல் அவரது ஆட்டத்தில் ஏகப்பட்ட தடுமாற்றம்..!
அவரையே களமிறக்க வேண்டிய. கட்டாயம். துணையாக இன்னொரு ‘தடுமாற்றத்தை ஜோடி சேர்த்து விட
முடியுமா...? ஆகவே,தென் ஆஃப்ரிக்காவின் அனுபவம் வாய்ந்த வீரர் டூ ப்ளஸ்ஸியை அனுப்பினார்கள்.

அவர் முதல் ஓவரிலேயே மூன்று ரன்களுக்கு ரன் அவுட்..! நான்காவது ஓவரில் அவுட்டாகி இருக்க வேண்டிய
விஜய் சற்று தாமதித்து அவுட் -பெற்ற ரன்கள் பத்து ! ரெய்னாவும் ப்ராவோவும் ஜோடி சேர ஒரு சிக்சர் உட்பட
பல பவுண்டரிகள் உதிர்ந்தன.. அத்தோடு சரி.இவர்கள் ஆட்டமிழந்த பிறகு 10-வது ஓவர் முதல் 20-வது ஓவர்
வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.

ஆனால், அந்த நேரத்தில் கூட சென்னை 2 விக்கட் இழப்புக்கு 75 ரன்கள். பிறகு வெறும் 39 ரங்களுக்கு மீதமுள்ள
எட்டு விக்கட்டுகளையும் இழந்தது தான் பரிதாபம். விக்கட்டுகள் சரிவதைப் பார்த்து அல்பி மோர்க்கலுக்கு முன்பு
தோனி வந்திருக்க வேண்டும் அல்லது பத்ரிநாத்துக்கு முன்பாவது வந்திருக்க வேண்டும் அப்படிச் செய்யாதது
எதனால் என்பது புரியாத புதிர்..! அநியாயத்துக்கு அவரும் ரன் அவுட் அஸ்வினும் ரன் அவுட்.! பத்து கோடி ரூபாய்
விலை கொடுத்து வாங்கப்பட்ட ஜடேஜா வந்து ஐந்து பந்துகளை சந்தித்து மூன்று ரன்கள் பெற்று அவுட். பந்து வீச
வந்தபோது அவர் நிலை இன்னும் பரிதாபம் - ஒரே ஓவரில் 15 ரன்கள் ( என்ன கொடுமை..சரவணா.!!! ) 111 ரன்கள்
என்பது தாக்குப் பிடிக்கக் கூடிய எண்ணிக்கையா..?

45 பந்துகளில் சதமடித்துப் புகழ் பெற்ற ரிச்சர்டு லெவியுடன் களத்துக்கு வந்தார் சச்சின். 35 பந்துகளில் 3 சிக்சர்களுடன்
லெவி அரைச்சதம். சச்சின் விரலில் காயத்துடன் வெளியேற்றம். அம்பட்டி ராயுடுவும், ஃப்ராங்க்ளினும் எரிகிற தீயில்
ஜோராக எண்ணை வார்த்தார்கள்... 19 பந்துகள் மீதமிருக்க எட்டு விக்கட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி.

மும்பை வென்றது என்பதை விட சென்னை தோற்றது என்பதே சரி.

No comments:

Post a Comment