Tuesday, March 27, 2012

இலங்கை கலையுலகின் துருவ நட்சத்திரம்


அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்‌ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது.

ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி.

ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த “நாடக அரங்கில், அச்சாணி போல் திகழ்ந்த இரு அங்கங்கள் நானும் சகோதரி ராஜேஸ்வரி பிச்சாண்டியும்.

ஆண்களில் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் தந்தை டி.எஸ்.பிச்சையப்பா, “மாடசாமி” சோமசுந்தரம், தாசன் பெர்னாண்டோ, ரொசாரியோ பீரிஸ், விக்டர், ”விதானையார்” கார்த்திகேசு சிவத்தம்பி, வீ.சுந்தரலிங்கம் ”ரேடியோ மாமா” சரவணமுத்து, எம்.எஸ்.ரத்னம், TPO நடராஜா என்று ஒரு ஜாம்பவான்கள் பட்டாளம். அவர்களுடன் நானும்..!


பெண்களில் ஃபிலோமினா சொலொமொன், பஞ்சவர்ணம் லக்‌ஷ்மணன், ஆனந்தி சுப்ரமண்யம் (சூர்யபிரகாஷ்), சரசாம்பிகை சுப்ரமனியம், ஜோசஃபீன் ரொசாரியோ, ஜோசஃபீன் கோஸ்தா, பரிமளாதேவி விவேகானந்தா, தீரா ஆறுமுகம் என்று திறமைசால் கலைஞிகள் என்றோர் கூட்டம், அவர்களுள் எழுத்தாளர் சண்முகத்தை மணந்து கொண்டதால் திருமதி சண்முகமாகிவிட்ட ராஜேஸ்வரியும்..!

எழுத்தாளர்களில் கலாநிதி கைலாசபதி, இலங்கையர்கோன், தாளையடி சபாரத்னம். ஸக்கரியா சிமியோன், சண்முகம், நஸ்ருத்தீன், NSM ராமையா, சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, “எஸ்போ” என்ற அற்புதமான ஆற்றல் மிக்கவர்களின் படைப்புகளை கூர்த்த மதியுடனும், தேர்ந்த ஞானத்துடன், மேற்சொன்ன கலைஞர்களுடைய அபாரத் திறமையாலும் மெருகுசேர் நாடங்களை உருவாக்கி இலங்கை வானொலி நிகழ்ச்சிகளிலேயெ “நாடக அரங்கை” தனித்வத்துடன் திகழச செய்தவர் அந்த மாபெரும் கலைஞர் “சானா”
சண்முகநாதன்...!
.

சானாவுக்கு யாரும் - எந்தக் கலைஞரும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பிரதிபலிப்பு என்று சொல்வது கட்டோடு பிடிக்காது. அதனால் தன்னை இலங்கை சிவாஜி, இலங்கை MR ராதா என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் ‘ஒடிசன்’ கட்டத்திலேயே கழற்றி விடப்பட்டு விடுவார்கள்.

ஆனால் இதில் ஒரு நகை முரண் உண்டு. என்னை சிவாஜியாகவும், ராஜேஸ்வரியை நடிகை பத்மினியாகவும், விசாலாக்‌ஷியை நடிகை சாவித்திரியாகவும் வர்ணித்து நேயர்கள் எழுதும் கடிதங்களை தனியாக எடுத்து வைத்து பிறகு எங்களிடம் ரகசியமாகக் காண்பித்து தானும் குதூகலிப்பார். அத்துடனில்லை, “நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் வேறு யாராகவும் இருக்கக்கூடாது என்பதற்கு ரசிகர்கள் உங்களுக்கு விடும் எச்சரிக்கை இது” என்று அதற்கு ஒரு புது அர்த்தமும் சொல்வார். ஆனால் நாங்கள் யாரும் யாரையும் ‘கொப்பி’ அடிப்பதில்லை என்பது அவருக்கும் தெரியும் எங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஒரு முறை ஒரு விருந்தில் என்னை பாடச் சொன்னார்கள். நான் குரலை மாற்றி ஜெயராமன் போலவே “ஈடற்ற பத்தியின்...” பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று, உச்ச ஸ்தாயியில் ஒரு வீறிட்ட அலறல், பிறகு உணர்ச்சிப் பிழம்பாய், அந்தப் படத்தில் பத்மினி பேசிய வசனம், கைங்கர்யம் ராஜேஸ்வரி..!. சற்று நேரம் அரண்டு அந்தரப் பட்டுப்போன கூடியிருந்தவர்-களிடமிருந்து கிளம்பிய ஆரவார கோஷம் அந்தக் கட்டிடத்தையே கிடுகிடுக்க வைத்தது.

நானும் ராஜேஸ்வரியும் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் மேடை நாடகம் என்பது ஒன்றே ஒன்றுதான். அது “ லண்டன் கந்தையா “ இந்த நாடகத்துக்கு தொடக்கம் குறித்தவர் இலங்கையர்கோன் ஆனால் தொடர்ந்து எழுதியவர் சண்முகம்.

நான் நாடக அரங்குக்கு ‘ஒடிசன்’ இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட போது ‘அரைக் களிசான் போட்ட ஒரு 12 வயதுப் பொடியன். ராஜேஸ்வரி எனக்குப் பிறகுதான் உள்ளே வந்தார். என்னை விட பல வயது மூத்தவர். இலங்கையில் நீ, நான் என்று பேசும் வழக்கமில்லை. ஆனால் என்னை அவர் அப்படித்தான் அழைப்பார். கேட்டால், “இந்தப் பொடிப்பயல் என் உடன் பிறவா தம்பி, வேறு எப்படிக் கூப்பிடுவது என்பார். நானும், “சரிதான்... போ.. கிழவி” என்பேன்.

ஆனால் நாடகங்களில், காதல் காட்சிகளில், உருகி வழிவதுண்டு. நாடகங்களை தொடர்ந்து கேட்கும் ஒருவர், “உங்கள் மகனுடைய போக்கு சரி இல்லை’ என்று என் தந்தையிடம் ‘போட்டுக் கொடுக்க” என் தந்தை மெல்ல ரொசாரியோ பீரிசிடம் விசாரிக்க, அவரோ, “ ஐயோ, உங்க பையன் பச்சக் குழந்த, அதனாலே நாங்க குழந்தைகளுடைய பால் மாவின் பெயரான “ கவ் & கேட்” (Cow & Gate) என்று சொல்லித்தான் அவரை செல்லமாக அழைப்போம் என்று சொல்ல, உடனிருந்த ராஜேஸ்வரி, “ஐயா இது போன்ற ஒரு பிள்ளையைப் பெற நீங்களும் ஜபாரின் அம்மாவும் பெருமைப் பட வேண்டும்” என்றிருக்கிறார். அதற்கு என் தந்தை, “அவனுக்கு தாயார் இல்லை அம்மா” என்று கண்கலங்க , அதுவரை அது பற்றித் தெரியாதிருந்த ராஜேஸ்வரி அழுதே விட்டாராம். அதன் பிறகும் ராஜேஸ்வரி என் மீது செலுத்திய பாசமும் பரியும் உண்மையில் ஒரு தாயுடையது.

சமீபத்தில் கொழும்பு வந்திருந்த போது அவரை தொலை பேசியில் அழைத்தேன். CALLER TUNE என்ன என்கிறீர்கள், தனுஷின் “கொலவெறி..டி..”. “கிழவிகளுக்கெல்லாம் ஏன் இந்தக் கொலவெறி..? என்று நான் கேட்ட போது, மறுமுனையில் கேட்டகணீர் வெடிச் சிரிப்பு ராஜேஸ்வரியின் ‘ட்ரேட்-மார்க்’. அது இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ரஸ்மினின் ‘ சமூக வானொலி” நூல் வெளியீட்டு விழாவில், அங்கு வந்திருந்த பிரமுகர்களிடமெல்லாம், அவர்களது கை எழுத்துக்களை திரட்டி அதை ராஜேஸ்வரியக் கொண்டு என்னிடம் கொடுக்கச் செய்து எங்கள் இருவரையும் வித்தியாசமான முறையில் கௌரவித்தார்கள். அப்போது சிவாஜிக்கு பத்மினி அளிக்கும் கௌரவம் என்றார் அவருக்கே உரிய வாஞ்சையுடன்..!

ராஜேஸ்வரிக்கு அழகான கணீரென்ற குரல் - தெளிவான அட்சர சுத்தமான உச்சரிப்பு - கையாளும் பாத்திரத்தின் மீது பரிபூரண ஆளுமை - அற்புதமான நடிப்பு. இவை அத்தனையும் ராஜேஸ்வரியின் தனிச் சிறப்புகள் - முத்திரைகள். பிற்காலத்தில் வர்த்தக ஒலிபரப்பில் ராஜேஸ்வரியும் விசாலாக்‌ஷியும் கொடி கட்டிப் பறந்ததற்கு அவர்களது சொந்தத் திறமை போக “நாடக அரங்கு” என்ற பயிற்சிப்பட்டறையில் பெற்ற பட்டறிவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

அடக்கத்துடன் ஒன்று சொல்வேன். உலகிலேயே மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்களாக ஆண்களில் நானும், பெண்களில் ராஜேஸ்வரியும் இருந்தோம். இன்று அதில் ஒரு பாதி இல்லை. காலம் புதுப் புது கலைஞர்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் ஆனால் இழந்தவைகளை ஈடு செய்ய அதனால் இயலாது - முடியாது. அந்த வகையில் ராஜேஸ்வரியினுடையது ஈடு செய்ய முடியாத பேரிழப்பே.

மூத்த ஒலிபரப்பாளன் என்கிற முறையில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு விழா எடுக்க என்னை அணுகினார்கள். அப்படி ஒன்று நிகழ்வதாயின் ராஜேஸ்வரியையும் இந்தியாவுக்கு அழைத்து அந்த விழாவில் கௌரவிக்கச் செய்ய வேண்டும் என்று அவாக் கொண்டேன்.

ஆனால், இறைவன் இந்த சாமான்யனை முந்திக் கொண்டு மரணம் என்னும் மஹா பெரிய மகத்தான விருதை - கௌரவத்தை ராஜேஸ்வரிக்கு வழங்கி விட்டான்.

உள்ளத்து உணர்வுகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்று சொல்கிறேன்... போ கிழவி போ...எங்கள் உணர்வுகளில் என்றென்றும் கலந்திருப்பாய்....இதயங்களில் நிறைந்திருப்பாய்....கலாபிமானி களின் நெஞ்சங்களில் கண்னியத்துடன் கொலு வீற்றிருப்பாய்... கடந்த கால நினைவுகள் எண்னத் திரையில் பயணிக்க... கண்ணீர் கண்களை நிறைக்க பிரியா விடை தருகிறோம்... போ கிழவி..போ.

1 comment:

  1. இடுகை மனதை நெகிழ வைத்துவிட்டது. இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருப்பது இளமையில் ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
    உங்களுக்கு எங்கள் நன்றி,வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்.

    மற்றபடி பின்னூட்டத்தில் word verification-ஐ நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete